அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததற்கு டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.
18 பேரும் கொறடா உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக கவர்னரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கின் எழுத்துப் பூர்வமான வாதங்களை கொண்ட மனுக்களை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்
இந்த நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதியுடன் விசாரித்த நீதிபதி சுந்தர் தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். அதனால் தீர்ப்பு அளிக்க அவர் சென்னை வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.