செய்திகள்

தகுதி நீக்கம் எதிரொலி: சட்டமன்ற விடுதியை காலி செய்யும் 18 எம்.எல்.ஏ.க்கள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விடுதியை காலி செய்கின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள்தங்கள் பதவி காலம் முழுவதும் இந்த வீடுகளில் தங்கி கொள்ளலாம்.

தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளதால் இவர்கள் 18 பேரும் எம்.எல்.ஏ. பதவியை இழந்து விட்டனர்.

இதனால் இவர்களுக்கு உரிய சலுகைகள், சம்பளம் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தையும் பூட்டி விட்டனர்.

சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள வீடுகளை உடனே காலி செய்யுமாறு நேற்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

பதவி இழந்த எம்.எல். ஏ.க்கள் வெளியூரில் உள்ளதால் எம்.எல்.ஏ. விடுதியில் அவரது உதவியாளர்களும், கட்சிக்காரர்களும்தான் இருந்தனர்.

சட்டசபை அதிகாரிகள் சென்று வீட்டை காலி செய்ய கூறிய போது, எம்.எல்.ஏ. ஊரில் இல்லை என்று கூறி 2 நாட்கள் கால அவகாசம் கேட்டனர்.

பார்த்தீபன் எம்.எல்.ஏ. அறையில் தங்கியிருந்த உதவியாளர்கள் பொருட்களை வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் மற்ற 17 பேரும் அறையை காலி செய்ய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.