புதிய மகளிர் திட்ட இயக்குனர் எஸ்.உமாமகேஸ்வரி 
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உழைக்கும் பெண்களுக்கு 1,775 அம்மா இருசக்கர வாகனங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு 1,775 அம்மா இருசக்கர வாகனங்கள் இந்த ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மகளிர் திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்ட பிறகு முதல் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ் வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனராக எஸ்.உமாமகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தின் முதல் மகளிர் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம், சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், ஊராட்சி அமைப்புகளின் கூட்டமைப்பு மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, சமுதாய குழுக்களுக்கு விரிவாக்கக் கடன் உதவி, நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் கடன், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி, கம்ப்யூட்டர், தையல் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

கடந்த ஆண்டு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.58 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.210 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு இந்த ஆண்டு இதுவரை 580 பேருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஆண்டு 1,775 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மகளிருக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் மானியமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 31 ஆயிரத்தி 250 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இதை, உழைக்கும் மகளிர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மகளிருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னை நேரில் அணுகலாம், எனத் தெரிவித்தார். அப்போது உதவி திட்ட இயக்குனர் பழனி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.