விழுப்புரம்:
அகில இந்திய அளவில் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்துகள் கொள்முதல், விற்பனை உள்பட விவரங்களை பதிவு செய்ய ‘இ-போர்ட்டல்’ என்னும் எல்க்ட்ரானிக் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உத்தேசித்துள்ளது.
இதனை கண்டித்து அகில இந்திய அளவில் மருந்து வணிகர்கள் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,400 மருந்து கடைகள் உள்ளன. இவற்றில் 1,100 மருந்து கடைகள் இன்று அடைக்கப்பட்டன. அம்மா மருந்தகம் மற்றும் ஆஸ்பத்திரி அருகே உள்ள மருந்து கடைகள் திறந்திருந்தன.
இந்த மருந்து கடைகள் அடைப்பால் ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 600 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. விழுப்புரம் தாலுகாவில் மட்டும் 250 மருந்து கடைகளும், மொத்த விற்பனை கடைகள் 120-ம் மூடப்பட்டன.
இந்த மருந்து கடைகள் அடைப்பால் நோயாளிகள் மருந்து-மாத்திரை வாங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாளம், அனு மந்தை, கீழ்குத்துப்பட்டு, முருக்கேரி, எந்தியூர், பிரம்மதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் இன்று மூடப்பட்டன. இதனால் நோயாளிகளுக்கு மருந்து வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.