சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்த நிலையில் அவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.
மேலும் விஷம் குடித்ததால் கருக்கலைந்ததாகவும் கூறிய அவர்கள் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கடந்த 3 மாதத்திற்கு முன்பு மாணவியின் தந்தை விபத்தில் சிக்கியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவியின் தாய் உடனிருந்து கவனித்து வந்தார். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த பக்கத்து வீட்டை சேர்ந்த சென்டிரிங் தொழிலாளி மாயக்கண்ணன் (22) சிறுமியிடம் நெருங்கி பழகினார்.
பின்னர் ஆசை வார்த்தை கூறிய அவர் மாணவியுடன் உல்லாசமாக இருந்தார். இதனால் மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயக்கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.