டெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் 16வது மக்களவையை கலைக்குமாறு மத்திய அமைச்சரவை அளித்த தீர்மானத்தை ஏற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.