பைக்கில் தப்ப முயன்ற திருடனை சிறுமி தடுத்த காட்சி 
செய்திகள்

தாக்குதலில் காயமடைந்தபோதும் செல்போன் திருடனை தைரியமாக பிடித்த சிறுமி

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செல்போன் திருடன் தாக்கியதில் காயமடைந்தபோதும் அவனை சிறுமி மடக்கிப் பிடித்துள்ளார்.

மாலை மலர்

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்ரத 15 வயது சிறுமி குசம் குமாரி, கடந்த திங்கள் அன்று டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கபூர்தலா சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அந்த சிறுமியின் செல்போனை பறித்தனர்.

பைக்கில் பின்னால் அமர்ந்து வந்தவன் செல்போனை பறித்துக்கொண்டு மீண்டும் பைக்கில் ஏற முயன்றபோது, சுதாரித்துக்கொண்ட சிறுமி அவன் டி-ஷர்ட்டை கெட்டியாக பிடித்து இழுத்தார். இதனால் நிலைதடுமாறிய அந்த நபர், சிறுமியை கடுமையாக தாக்கினான். அப்போதும் அந்த சிறுமி அவனை தப்பிக்க விடாமல் போராடினார். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள், செல்போன் திருடனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவன் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டான். 

சிறுமியின் செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருடனுடன் சிறுமி போராடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.