கோப்பு படம் 
செய்திகள்

ராஜஸ்தான் - திருடர்களால் திருடப்பட்ட 15-ம் நூற்றாண்டை சேர்ந்த குர்ஆன் மீட்பு

ராஜஸ்தானில் ஒரு ஆண்டுக்கு முன்னர் மர்மநபர்களால் திருடப்பட்ட 15-ம் நூற்றாண்டை சேர்ந்த இஸ்லாமிய மத புனிதநூலான குர்ஆன் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பிகில்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு 15-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய மன்னர் அக்பர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய மத புனிதநூலான குர்ஆனை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

பல நூற்றாண்டுகளாக பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த குர்ஆன் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உரிமையாளர் வீட்டில் இருந்து மர்மநபர்களால் திருடப்பட்டது. 

இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருடனை பல மாதங்களாக தேடிவந்தனர். 

இந்நிலையில், அந்த குர்ஆனை திருடிய ஜம்வராம்ஹர் பகுதியை சேர்ந்த பன்வாரி என்ற நபர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட குர்ஆன் மீட்கப்பட்டுள்ளது. 

பன்வாரி தான் திருடிய 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த குர்ஆனை பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு நபருக்கு 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டியிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.