செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

அ.தி.மு.க.வில் இருந்து விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 153 பேரை ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சென்னை:

சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார்கள்.

நேற்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 497 பேரை நீக்கி நடவடிக்கை எடுத்தனர். இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மட்டும் 390 பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அ.தி.மு.க.வில் இருந்து விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 153 பேரை ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி உள்பட 113 பேரும், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 40 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அவர்கள் நீக்கப்பட்டதாகவும், அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். #Tamilnews