திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றிய 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளில் முன்பு இருந்த கலெக்டர் பிரசாந்த் மு.வட நேரே தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து, பாதியில் விடுபட்ட அந்த பணிகளை செய்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக தற்போதைய கலெக்டர் கந்தசாமி முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தொண்டு நிறுவனங்களும் நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கிரிவலப் பாதையில் காட்டுக்குளம், தருமராஜாகுளம், அமட்டன் குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை தூர்வாரி சீரமைக்கக்கோரி திருவண்ணாமலை நீர்த்துளி இயக்கம், சென்னை இ.எப்.ஐ. அறக்கட்டளை ஆகியவை முடிவு செய்தன.
இதையடுத்து, ரூ.25 லட்சம் செலவில் குளங்களைத் தூர் வாரும் பணியை கலெக்டர் கந்தசாமி நேற்று தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, கலெக்டர் கந்தசாமி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
14 கிலோ மீட்டர் உள்ள கிரிவலப் பாதையில் 350-க்கும் மேற்பட்ட சிறு, சிறு குளங்கள் இருந்தன. குளங்கள் வரைப்படங்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 150-க்கும் மேற்பட்ட குளங்களை, தற்போது காணவில்லை.
350-க்கும் மேற்பட்ட குளங்களும் அருகருகே இருந்துள்ளன. இவற்றிற்கு தண்ணீர் நிரப்ப பைப்லைன் மூலம் இணைப்புகள் இல்லை. பெரிய நெட்வொர்க்கும் இல்லை.
ஒரு குளம் நிரம்பிய பிறகு, அதில் இருந்து நீர் வழிந்தோடி பக்கத்தில் உள்ள குளங்களை சென்றடையும். சங்கிலி தொடர் போல 350 குளங்களிலும் அடுத்தடுத்து தண்ணீர் நிரப்பியுள்ளனர்.
தற்போது, நகரின் வளர்ச்சி கட்டிட மயமாக்கம் காரணமாக 100 முதல் 150 குளங்கள் வரை காணாமல் போயுள்ளது.
மாயமான அத்தனை குளங்களையும் கண்டறிந்து மீட்டெடுக்கும் பணியில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews