வாரங்கல்:
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி அமோக வெற்றி பெற்றது. கே.சந்திரசேகரராவ் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியின் முதல் பொதுக்கூட்டம் வாரங்கல்லில் நேற்று நடத்தப்பட்டது. அந்த கட்சி தோற்றுவிக்கப்பட்டு 16-வது ஆண்டு விழாவையொட்டி இந்த பொதுக்கூட்டம் வாரங்கல்லில் நடந்தது. இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். இதன் மூலம் அந்த கட்சி தனது செல்வாக்கை நிரூபித்து காட்டி உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.எஸ். தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் 15 லட்சம் பேர் திரண்டு இருப்பதை பார்த்து மிகவும் திருப்தி அடைந்தார். 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.எஸ். தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு வாகனங்களில் வாரங்கல்லுக்கு வந்து இருந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஐதராபாத்- வாரங்கல் சாலை, கரீம் நகர்-வாரங்கல் சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்றன.