பறிமுதல் செய்யப்பட்ட பஸ், மற்றும் மான்கறி. 
செய்திகள்

அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 15 கிலோ மான் கறி பறிமுதல்: டிரைவர் - கண்டக்டர் கைது

செங்கம் அருகே அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 15 கிலோ மான் கறியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் - கண்டக்டரை கைது செய்தனர்.

மாலை மலர்

செங்கம்:

செங்கத்திலிருந்து இளங்குண்ணி என்ற ஊருக்கு சென்ற அரசு பஸ் அங்கிருந்து நேற்று மாலை செங்கத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. பஸ்சை செங்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 40) ஓட்டினார். கண்டக்டராக கீழ்பென்னாத்தூரை சேர்ந்த எத்திராஜ் (46) இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிரைவர் கண்ணனிடம் ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை கொடுத்தார். அவரிடம் இதனை செங்கத்தில் வந்து வாங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

அதை வாங்கிய டிரைவர் கண்ணன், தனது இருக்கைக்கு பின்னால் வைத்தார். மாலை நேரம் என்பதால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் கூட்டம் அந்த பஸ்சில் அதிகமாக இருந்தது. டிரைவரும் அந்த நபர் சாக்குமூட்டையை கொடுத்ததை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பஸ்சில் மான்கறி கடத்தப்படுவதாக செங்கம் வனசரகர் அன்புவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனசரகர் அன்பு மற்றும் அலுவலர்கள் அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிடுவதற்காக மேல்புளுதியூர் அருகே உள்ள பழைய பஸ் பணிமனை அருகே காத்துக்கொண்டிருந்தனர்.

பஸ் வந்ததும் அதனை மறித்த வனத்துறையினர் பஸ்சுக்குள் சென்று சோதனையிட்டனர். அப்போது டிரைவர் இருக்கைக்கு பின்புறம் இருந்த மூட்டையில் 15 கிலோ மான் கறி இருந்ததை கைப்பற்றினர். அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் பஸ்சையும் அங்கேயே நிறுத்தினர். பயணிகள் வேறு பஸ்சுக்கு மாற்றப்பட்டனர்.

டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்களை பஸ்சுடன் வனத்துறையினர் வன அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு விசாரணைக்கு பின்னர் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் வனத்துறை அலுவலர்கள் பஸ்சை டிரைவர் கண்ணன் மற்றும் கண்டக்டர் எத்திராஜூடன் செங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவர் கண்ணனையும், கண்டக்டர் எத்திராஜையும் கைது செய்தனர்.

மேலும் யாருக்காக மான்கறி கடத்தப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.