பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி இன்று காலை பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகர் அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது.
இதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் மற்றும் கேன்களுடன் லாரியை முற்றுகையிட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால், லாரியைச் சுற்றி பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உடல் கருகி பரிதாபமாக பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும், ஏராளமானோர் தீக்காயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது லாரியின் அருகே இருந்த 6 கார்கள், 12 பைக்குகள் எரிந்து நாசமானது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது. 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டேங்கர் லாரியில் இருந்து சிந்திய பெட்ரோல் மீது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.