கோப்புப்படம் 
செய்திகள்

செனகல் நாட்டில் கடலில் கப்பல் கவிழ்ந்து 140 அகதிகள் உயிரிழப்பு

செனகல் நாட்டில் கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 140 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 200 பேர் இம்போர் நகரில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டனர். இந்த படகு செனகலின் வடமேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான செயின்ட் லூயிஸ் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகில் தீப்பிடித்தது.

இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் தீயில் இருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக நகர்ந்ததில் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செனகல் நாட்டின் கடலோர காவல் படையினர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் 60 பேரை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. பெண்கள் குழந்தைகள் உள்பட 140 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.