திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் உலக பிரசித்திப்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இந்த பூஜைகள் நடைபெறும் காலங்கள் சபரிமலையில் முக்கிய சீசன் காலமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் காலம் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. எனவே சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டன.
சபரிமலையில் சாலை பணிகளை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுக்கு மத்திய அரசு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் சபரிமலையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது.
பத்தனம் திட்டா-ராணி சாலை, எர்ணாகுளம்-கோட்டயம்-பம்பா, செங்கனூர்-பம்பா, செங்கனூர்- எரிமேலி, பத்தனம் திட்டா- எரிமேலி ஆகிய சாலைகள் சீரமைக்கப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது. நிலக்கல்லில் வாகனம் நிறுத்தும் இடமும் புதுப்பொலிவு பெற உள்ளது.
மாநில அரசும், சபரிமலை மேம்பாட்டு பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் சபரிமலையில் உள்ள பம்பை நதியை தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும், மருத்துவ வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்கவும் இந்த நிதி மூலம் திட்டம் தீட்டப்படுகிறது.
சபரிமலையில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்றே தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.