இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியை சேர்ந்த யூனஸ் மற்றும் நஹினா மசிஹ் என்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 14 வயது மகள் உள்ளார்.
பள்ளி செல்லும் சிறுமியை கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி அப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி சென்றுள்ளார். மேலும், சிறுமியை கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சிந்து மாகாணத்தில் கட்டாய திருமணம், குழந்தை திருமணத்தை தடுக்க 2014-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் 18-வயது நிரம்பாத தனது மகளை அப்துல் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளதாக சிந்து மாகாண ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவரின் உண்மையான வயதை கண்டறிய போலீசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் கோர்ட்டிற்கு வந்தது.
அப்போது மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்றாலும் அவருக்கு முதல் மாதவிடாய் சுழற்சி நிறைவடைந்து விட்டது.
அதனால் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் சிறுமிக்கு நடந்த திருமணம் செல்லும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்து, சீக்கியம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த பெண்களும், சிறுமிகளும் பெரும்பான்மை மதத்தினரால் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக பெருமளவில் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.