செய்திகள்

மதுரவாயலில் கூவம் ஆற்றின் ஓரத்தில் 130 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

மதுரவாயலில் கூவம் கரையோரம் உள்ள ஓம் சக்தி நகரில் இருந்த 130 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தரை மட்டமாக்கினார்கள்.

சென்னை:

சென்னையில் உள்ள கூவம் ஆற்றின் கரையோரம் பலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலத்தின்போது கூவம் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் தடை பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

இதனால் கூவம் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. வீடுகளை காலிசெய்யுமாறு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிப்பவர்களில் பலர் வீடுகளை காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகில் கூவம் கரையோரத்தில் இருந்த 380 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.

இன்று மதுரவாயல் பகுதியில் கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்காக இன்று காலை சென்னை மாநகராட்சி மண்டல உதவி கமி‌ஷனர் விஜயகுமார், செயற்பொறியாளர் திருமுருகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்குவந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரங்களையும் கொண்டு வந்திருந்தனர். அதன்மூலம் மதுரவாயல் ஓம் சக்திநகர் கூவம் கரையோரம் இருந்த 130 ஆக்கிரமிப்பு வீடுகளை இன்று இடித்து தள்ளினார்கள்.

இங்கு வசித்து வந்தவர்களுக்கு திருமழிசை அருகே உள்ள கூடம்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட லாரிகளில் ஏற்றி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும்போது அசம்பாவித சம்பவம் ஏற்படுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT