சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் அரசு ஒதுக்கிட்டு பி.இ., பி.டெக்., இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த வருடம் தொழில் நுட்பக்கல்வி இயக்குனரகம் இதனை நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே-2-ந்தேதி தொடங்கியது. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்கு 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதே அளவில் இந்த ஆண்டும் விண்ணப்ப பதிவு இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கடைசி நேரத்தில் ஒரு சிலர் பதிவு செய்யக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும் 1.35 லட்சத்திற்குள் தான் விண்ணப்ப பதிவு இருக்க வாய்ப்பு உள்ளது.
எதிர்பார்த்த அளவு விண்ணப்பங்கள் வராததால் பொறியியல் காலி இடங்கள் கடந்த ஆண்டைவிட அதிகமாக உருவாகும் என்று தெரிகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களைவிட விண்ணப்பித்த மாணவர்கள் என்ணிக்கை குறைவாக இருப்பதால் குறைந்த கட் ஆப் உள்ளவர்களுக்கு சிறந்த கல்லூரிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூன் 3-ந்தேதி ரேண்டம் எண் வழங்கப்படும்.
அதனைத்தொடர்ந்து ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதில் 43 மையங்களிலும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதனை தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று சேர்க்கை செயலாளர் டாக்டர் புருசோத்தமன் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.