பறிமுதல் செய்யப்பட்டுள்ள டாரஸ் லாரிகள் 
செய்திகள்

கூடங்குளம் பகுதிகளில் அதிகபாரம் ஏற்றிச்சென்ற 13 லாரிகள் பறிமுதல்

கூடங்குளம் பகுதிகளில் அதிகபாரம் ஏற்றிச்சென்ற 13 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரிகள் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம், இடிந்தகரை, பொன்னார்குளம், இருக்கன்துரை, சீலாத்திகுளம், சமூகரெங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கருங்கல்கள் ஏற்றப்பட்டு நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிருந்து எடுத்து செல்லப்படும் கருங்கற்கள் 40 டன் கொள்ளளவு கொண்ட டாரஸ் லாரிகளில் அதிக பாரத்துடன் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையிலும், இதில் இருந்து தவறி விழும் கற்களால் விபத்து ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழவும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பொதுநல மக்கள் இயக்கம் சார்பாக அதிக பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை கலெக்டர் ஷில்பா, ராதாபுரம் தாசில்தார் செல்வன், வள்ளியூர் ஏ.எஸ்.பி. அரிகர பிரசாத், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பொதுமக்களின் தொடர் புகாரையொட்டி தாசில்தார் செல்வன் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணிக்க மண்டல துணை வட்டாட்சியர்கள் 2 பேரை நியமித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் அப்பகுதிகளில் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து வந்தார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கூடங்குளம், ராதாபுரம் போலீசாருக்கு ஏ.எஸ்.பி. உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி சில லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். எனினும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லாரிகளில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வது தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.எஸ்.பி. அரிகரபிரசாத் தலைமையிலான போலீசார் கூடங்குளம் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 13 டாரஸ் லாரிகளில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த லாரிகள் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.