கோப்பு படம். 
செய்திகள்

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி தபால்-தந்தி காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது மதுரை உசிலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 9-ந் தேதி வீட்டைவிட்டு வேலைக்கு சென்ற சுடலைமுத்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவும், வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுடலைமுத்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுடலைமுத்து வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.