செய்திகள்

பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி 13 மாணவர்கள் உயிரிழப்பு- ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்த போது விபத்து

உத்தர பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற வாகனம் மீது ரெயில் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர். #UPBusTrainCollision #UnmannedCrossing

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரெயில், பள்ளி வாகனம் மீது மோதியது. விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உட்பட்ட துதி பகுதியில் இந்த விபத்து நடந்தது.

ரெயில் மோதியதில் பள்ளி வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.