செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் இலங்கை நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

இலங்கையில் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்ற இந்திய வீரர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து 19 பேர் கொண்ட அணியினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை குஜராத்தை சேர்ந்த மோனாத் சோனா நரேந்திரா இலங்கையின் மேற்கு கடற்கரை பகுதியான பமுனுகாமாவுக்கு சென்றார். நீச்சல் குளத்தில் குதித்தபோது அவர் மூழ்கினார். ஆனால் அவர் வெளியே வரவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நீச்சல் குளத்தின் மேற்பார்வையாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இந்திய இளம் வீரர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.