வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கஜபதி மாவட்டம் பாரகாரா கிராமத்தில் நேற்று இடைவிடாமல் மழைபெய்ததால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் விளக்கினார்.