செய்திகள்

இமாச்சலில் கட்டடம் இடிந்து விபத்து: 11 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாலை மலர்

இமாச்சல பிரதேசத்தில் 3 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்று இடிந்து விபத்திற்குள்ளானதில் அந்த கட்டடத்தில் இருந்த பணியாளர்கள் 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இமாச்சலின் கங்காரா மாவட்டத்தில் உள்ள நுர்பூர் உட்கோட்டத்தில், அடுத்தடுத்து இரு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டடம் கட்டி முடிக்கும் தருவாயில் இருக்கும் நிலையில், அடுத்த கட்டடத்திற்கான அடித்தளம் போடப்பட்டு வந்தது. அதற்காக குழிதோண்டுகையில் அருகிலிருந்த கட்டடம் இடிந்து விழுந்தததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் அங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்த 11 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு 12-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவலின் படி, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர், மோது ராம் (45) என்பதும் தெரிய வந்துள்ளதாக நுர்பூர் மாஜிஸ்திரேட் அபித் ஹூசைன் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.