தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான மலை அடிவார கிராமங்கள் உள்ளது. இங்கு அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கிகள் (எஸ்.பி.எம்.எல். ரக வகைகள்) நிறைய பேர் வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் முதற்கட்டமாக அந்த நாட்டு துப்பாக்கிகள் எங்கிருந்து சப்பளை செய்யப்படுகிறது. நாட்டு துப்பாக்கியை தயார் செய்து யார் வழங்குகிறார்? என்பது குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த பணியை பஞ்சப்பள்ளி போலீசார், மலை அடிவார கிராம பகுதி மக்கள் யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் ரகசியமாகவே மேற்கொண்டு வந்தனர். ஏனேனில் கிராம பகுதி மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால் சுதாரித்து கொண்டு அவர்கள் துப்பாக்கியை மறைத்து வைத்து விடுவார்கள். இதனால், நாட்டு துப்பாக்கி சப்பளை செய்யும் முக்கிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் போய் விடும் என்பதற்காக ரகசியமாக இப்பணியை மேற்கொண்டு வந்தனர்.
இதற்காக போலீசார் தங்களை அடையாளம் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக சாதாரண உடை அணிந்து உளவு பிரிவு போலீசார் உதவியுடன் கிராம பகுதி மக்களிடம் நெருங்கி பழகினார்கள். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஜிஞ்சேபள்ளி பகுதியை சேர்ந்த பாப்பாச்சாரி மகன் தாசன் (வயது 35) என்பவர் தான் துப்பாக்கியை தயார் செய்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று தாசனை கைது செய்தனர். அங்கு நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்வதற்கான மரக்கட்டைகள், முழுமையாக செய்து முடிக்கப்படாத துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் தாசன் கொடுத்த தகவலின் பேரில் நம்மாண்ட அள்ளியை சேர்ந்த மகாலிங்கம்(45), செங்கோட்டையன் (56), கதில்வேல்(44), தங்கவேல்(50), கரகூர் பகுதியை சேர்ந்த கணேசன்(40), புட்டன்(30), நம்மாண்ட அள்ளி அருகே உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மயில்சாமி(31), கென்டையன ஹள்ளி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (40), ராமச்சந்திரன் (29), ராஜா(29) ஆகியோர் வீடுகளுக்கு சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் விவசாயிகள் ஆவார்கள். இவர்கள் அந்த பகுதியில் விவசாய நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த பயிர்களை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு துப்பாக்கிகள் விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தாக கூறப்படுகிறது. மேலும் நள்ளிரவு நேரத்தில் அவர்கள் வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் நள்ளிரவு வேளையில் முயல், காட்டு பன்றி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளை வாங்கி வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு துப்பாக்கி தயார் செய்து கொடுத்து வந்த தாசனிடம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த யாருக்காவது துப்பாக்கிகளை தயார் செய்து கொடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது துருவி, துருவி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.