கோப்புபடம் 
செய்திகள்

அம்பை அருகே மெக்கானிக் கொலையில் 11 பேர் கைது

அம்பை அருகே மெக்கானிக் கொலையில் 11 பேரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அம்பை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பிரம்மதேசம் பஞ்சாயத்து கவுதமபுரி தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலு மகன்கள் ரவிச்சந்திரன் (வயது 50), மதியழகன் (45). ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். மெக்கானிக்கான மதியழகன், அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இவர்கள் 2 பேரும் கடந்த 27-ந் தேதி இரவு அம்பையில் இருந்து தங்களது ஊருக்கு தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். கவுதமபுரி அங்கன்வாடி மையம் அருகில் சென்றபோது, அங்கு மறைந்து இருந்த கும்பல் திடீரென்று வழிமறித்து கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன், மதியழகன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி மதியழகன் உயிரிழந்தார். ரவிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால், சுப்பிரமணியன், கணேசன், அரவிந்த், பீமாராவ், முத்து, செல்வம், மதன், முருகன், மணிகண்டன், பாக்கியராஜ் ஆகிய 11 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.