நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி பெருமாள். இவருடைய 2-வது மகள் பேச்சியம்மாள் (வயது 15). இவர் பாளையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அரையாண்டு தேர்வில் பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக தெரிகிறது. இதை ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு வந்த பேச்சியம்மாள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார், பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள், மாணவி படித்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக் கூட நிர்வாகத்தை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது உயர் அதிகாரிகளிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவிடம் மனு கொடுத்தனர். அதில் மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தநிலையில் மாணவி பேச்சியம்மாளின் உடலை வாங்க அவர்களது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவி படித்த பள்ளியை இன்றும் முற்றுகையிட்டனர்.
மேலும் பள்ளியின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.