சேலம்:
சேலம் மாநகரில் கடந்த 6½ மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 109 பேர் பலியாகி உள்ளனர். விதிமுறைகளை மீறியதாக ரூ.96 லட்சத்து 33 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு வரை சேலம் மாநகரில் இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் 9 லட்சம் வாகனங்கள் ஓடுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளுக்கும் அடிக்கடி நடக்கிறது. இந்த விபத்துகளில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை வரை 6½ மாதங்களில் 105 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 109 பேர் பலியாகி உள்ளனர். 508 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 390 உயிர்சேதமில்லாத விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 6½ மாதங்களில் நடந்த சாலை விபத்துகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு உயிரிழப்பு குறைந்துள்ளது.
சேலம் மாநகரில் அதிக பாரங்களை ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்லுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல் என விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் உடனடியாகவும் அல்லது கோர்ட்டு மூலமும் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6½ மாதங்களில் விதிமுறைகளை மீறியதாக 59 ஆயிரத்து 575 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.96 லட்சத்து 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் கூறும் போது, “வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பலர் காயமடைகின்றனர். ஒரு வீட்டில் ஒருவர் இறந்தாலோ அல்லது காயமடைந்தாலோ அந்த குடும்பமே பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் கடைபிடித்தாலே விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது’ என்றார்.