பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக செந்தில்குமாரை 108 ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அப்போது ஆம்புலன்சின் டிரைவர் இருக்கை பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஆம்புலன்சு டிரைவர் பழனியை சேர்ந்த பாரதிராஜ் லேசான காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு இருந்த நோயாளி செந்தில் குமாரை உடனடியாக வெளியேற்றி வேறு ஆம்புலன்சிற்கு மாற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த தீயணைக்கும் உபகரணங்களை கொண்டு தீயை அணைத்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.