கத்திரி வெயில் 
செய்திகள்

திருச்சியில் 106 டிகிரி கத்திரி வெயில் - வீட்டிற்குள் முடங்கும் மக்கள்

திருச்சியில் கடந்த சில தினங்களாக 103, 104 டிகிரியாக இருந்த வெயில் கடந்த 6ந்தேதி அதிகபட்சமாக 106 டிகிரியாக கொளுத்தியது.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் கடந்த 4ந்தேதி கத்திரி வெயில் தொடங்கியது. சாதாரண நாட்களில் 104 டிகிரி வரை திருச்சியில் வெயில் கொளுத்தியது. கத்திரி வெயில் மிகவும் கொடு மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போன்று கடந்த சில தினங்களாக 103, 104 டிகிரியாக இருந்த வெயில் கடந்த 6ந்தேதி அதிக பட்சமாக 106 டிகிரியாக கொளுத்தியது. தற்போதும் வெயில் வாட்டு கிறது.

வீட்டிற்குள் கடும் வெப்ப அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தவிக்கின்றனர். காலை 9 மணி முதலே திருச்சியில் வெயில் அதிகளவில் சுட்டெரிக்கிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

ஏற்கனவே திருச்சியில் கடந்த 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட தடை இருந்ததால் அதிக அளவில் மக்களை ரோட்டில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டது.

இதனால் திருச்சியில் மீண்டும் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாளில் மட்டும் திருச்சி சாலைகளில் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர். அதன் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர்.

இதற்கு ஊரடங்கு காரணமில்லை என்றாலும், திருச்சியில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் தான் காரணம்என்று கூறப்படுகிறது.

சாலையில் நடந்தால் மயக்கம் வரும் அளவிற்கு வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டனர். சாலையில் செல்வோர் கூட கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்கின்றனர். 2 சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடந்து செல்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து விட்டது.

தற்போது ரே‌ஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வாங்குபவர்கள், அதை பெறுவதற்காக செல்வோர் வேறு வழியில்லாமல் செல்கிறார்கள். இது தவிர வங்கி மற்றும் கடைகளுக்கு செல்வோர் மட்டுமே சாலைகளில் செல்கிறார்கள். அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு யாரும் வெளியில் செல்லமுடியவில்லை.

இதனால் திருச்சியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு அமலில் இருப்பது போல உள்ளது. வருகிற 28ந்தேதி வரை திருச்சியில் கத்திரி வெயில் கொளுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கலாம் என்பதால் மக்கள் அதிர்ச்சி யில் உள்ளனர். வீடுகளுக்குள் வெப்பக்காற்று வீசுவதால் வீட்டிலும் இருக்க முடியவில்லை. சுற்றுலா போன்ற தலங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் 2020 மே மாதம் கந்தக பூமியான திருச்சி மக்களுக்கு மேலும் சிரமத்தை கொடுத்துள்ளது. இது இதுவரை இல்லாத உச்சம் என்று திருச்சி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.