புதுச்சேரி:
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி பல்வேறு புகார்களை எழுப்பி இருந்தார்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சி.பி. ஐ.க்கும் கவர்னர் கிரண்பேடியே நேரடியாக புகாரும் அனுப்பி உள்ளார். கவர்னரின் புகாரின் பேரில் மாணவர் சேர்க்கை தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதோடு புதுவை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் தனி கவனம் செலுத்தி வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு பிறகு தனியார் சுயநிதி கல்லூரிகள், மருத்துவ கவுன்சிலிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி புதுவை மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியது. புதுவை மருத்துவ கல்லூரிகள் அனுப்பிய அறிக்கையை கவுன்சில் ஆய்வு செய்தது.
புதுவை அரசு சார்பில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அளிக்கப்பட்ட பட்டியலையும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் பட்டியலையும் மருத்துவ கவுன்சில் ஒப்பீடு செய்தது.
இதில், விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக 3 மருத்துவ கல்லூரிகளில் 105 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களை நீக்க மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில்-41, வெங்கடேஸ்வரா கல்லூரியில்-38, பிம்ஸ் மருத்துவ கல்லூரியில்-26 என 105 மாணவர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கை தொடர்பாக புதுவை பல்கலைக்கழக பதிவாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலின் அதிரடி நடவடிக்கையால் புதுவையில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.