ஜவுளி 
செய்திகள்

வட மாநிலங்களுக்கு ஜவுளிபாரம் ஏற்றி செல்லும் 1,000 லாரிகள் நிறுத்தம்

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவுளிபாரம் ஏற்றிச் செல்லும் 1,000 லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

மாலை மலர்

நாமக்கல்:

கனரக வாகனங்களில் ஏற்றப்படும் ஜவுளி பாரங்களில் சமீபகாலமாக அரசு நிர்ணயித்து உள்ள 3.8 மீட்டர் உயரம், 2.6 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் நீளத்தை விட அதிகப்படியாக ஏற்றப்படுகிறது. இதனால் ஜவுளி லோடு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அதிகப்படியான அபராதம் விதித்து வருகின்றனர்.

எனவே இதை முறைப்படுத்த வலியுறுத்தி நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ஜவுளி பாரம் ஏற்றுவது இல்லை என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு லாரிகளில் ஜவுளிபாரம் ஏற்றாமல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

ஈரோடு, திருப்பூர், பல்லடம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 1,000 லாரிகளில் ஜவுளி ஏற்றி வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். சம்மேளனத்தின் வேண்டுகோளை ஏற்று லாரி உரிமையாளர்கள் இந்த வாகனங்களில் நேற்று ஜவுளிபாரம் ஏற்றவில்லை.

நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்றும் (வெள்ளிக் கிழமை), நாளையும் (சனிக் கிழமை) ஜவுளிபாரம் ஏற்ற மாட்டோம். எங்களது போராட்டத்திற்கு பிறகாவது ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகபடியான பாரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.30 லட்சம் வீதம் நஷ்டம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பல்லாயிரக்கணக்கான டன் ஜவுளிகள் தேங்கும் சூழ்நிலை இருந்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.