சென்னை:
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சென்னை பாரிமுனை குறளகம் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்த காலை 11 மணிக்கு குவிந்து இருந்தனர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் பாக்கியம், ஆறுமுகநயினார். சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அங்குள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷ மிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 1000 பேர் கைதானார்கள். அவர்களை அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு பஸ்சில் ஏற்றி சென்று அடைத்தனர்.
கம்யூனிஸ்டு கட்சியினரின் மறியல் போராட்டத்தால் பாரிமுனையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டது.
போராட்டம் தொடர்பாக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து ஜனாதிபதி அனுமதிக்கு அனுப்ப வேண்டும்.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் 5 சதவீதம் இடம் கிடைப்பது அரிது. நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.இதில் தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.