மதுபான கடையில் (கோப்புப்படம்) 
செய்திகள்

ஐதராபாத்தில் மது குடிக்க முடியாததால் 100 பேருக்கு மனநலம் பாதிப்பு - ஆஸ்பத்திரியில் அனுமதி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐதராபாத்தில் மது குடிக்க முடியாதால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதேப்போல இந்தியா முழுவதும் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அதற்கு அடிமையானவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மது குடிக்க முடியாததால் அவர்களது மனநலமும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மது குடிக்க முடியாதால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள ஐ.எம்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்த முடியாததால் அவர்களது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

அவர்களுக்கு மன ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிக்க முடியாமால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 22 முதல் 55 வயது வரை இருக்கும். இதில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் ஆவார்கள்.