பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் 
செய்திகள்

வல்லநாடு அருகே 100 மூட்டை மணல் பறிமுதல்

வல்லநாடு அருகே 100 மூட்டைகளில் அள்ளி வைக்கப்பட்ட மணலை அதிகாரிகள் மீண்டும் ஆற்றில் கொட்டினார்கள்.

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே உள்ள ஆழிகுடி தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் திருட்டு நடப்பதாக தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணன் மற்றும் வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மாசானமுத்து ஆகியோர் ஆழிகுடி தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்றனர். இதை பார்த்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மேலும் அங்கு 50 கிலோ எடை உள்ள சுமார் 100 மூட்டைகளில் மணல் அள்ளி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. பின்னர் அதிகாரிகள் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, மணலை மீண்டும் ஆற்றில் கொட்டினார்கள்.

இதுதொடர்பாக தாமிரபரணி ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் திருட்டை தடுக்க அந்தந்த பஞ்சாயத்து மூலமாக கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டை தடுக்க வருவாய் துறை மூலம் அனைத்து நடவடிக்கையும் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

SCROLL FOR NEXT