செய்திகள்

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும்: 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். முதல்-அமைச்சர் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச வேண்டும் என்று தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார்.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 10 தொழிற்சங்கங்கள் 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தன.

இதையடுத்து தமிழக அரசு, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனால் நேற்று மதியம் மீண்டும் தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நேற்று இரவு முதல் பஸ் போக்குவரத்து முடங்கியது. இன்று காலையிலும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. டிரைவர்கள் பணிக்கு வராததால் டெப்போவிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அதை சமாளிக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களான தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப், பணியாளர் சம்மேளனம், தேசிய முற்போக்கு திராவிட தொழிற்சங்கம், மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி, அம்பேத்கர் தொழிலாளர் பேரவை, தேசிய திராவிட கழக தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று சேப்பாக்கம் மசூதி தெருவில் உள்ள அலுவலகத்தில் இன்று காலையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கும் வகையில் அரசு ஈடுபடுவதால் அதை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும் பேசப்பட்டது.

இந்த ஆலோசனையில் பங்கேற்ற தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை கேட்டுதான் போராடுகிறார்கள். அரசு ஏன் இதை தாமதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் பணத்தை கொடுக்க வேண்டியது தானே?.

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. எனவே முதல்-அமைச்சர் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச வேண்டும்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறோம்.