புதுடெல்லி:
தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதற்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அமைப்பு போராட்டத்துக்கு தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.
இதன்படி நேற்று பல மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக வடமாநிலங்களில் குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜார்கண்ட், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் முழு அளவில் போராட்டம் நடைபெற்றது.
இதில் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஆங்காங்கே போலீசாரும், போராட்டக்காரர்களும் மோதிக் கொண்டனர். சில இடங்களில் தலித் அமைப்பினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.
கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். போலீஸ் துப்பாக்கி சூட்டிலும் மற்றும் மோதலிலும் காயம் அடைந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம் காரணமாக பல மாநிலங்களில் இன்றும் சுமூக நிலை திரும்பவில்லை.
இதனால் உத்தரபிர தேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருந்த தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தான் கலவரம் மிக அதிகமாக இருந்தது. அங்கு மட்டுமே 6 பேர் கலவரத்தில் பலியாகி உள்ளனர். உத்தரபிரதேசத்தில் மீரட், ஆக்ரா, காசியாபாத் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேச பகுதிக்கு மத்திய படையில் இருந்து 800 போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்துள்ளார். #BharatBandh