செய்திகள்

தஞ்சையில் பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

தஞ்சையில் பெண்ணிடம் 10 பவுன் தங்க செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை எம்.சி.ரோடு ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவருடைய மனைவி மஞ்சு (வயது 36). இவர் தஞ்சை பிலேரிமினா நகர் முதல் தெருவில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

பணி முடிந்து மஞ்சு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தனது பேக்கில் இருந்து செல்போனை எடுத்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் மஞ்சு கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தஞ்சை தெற்கு போலீசில் மஞ்சு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.