செய்திகள்

தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துள்ளனர். நேற்றும் 5 எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் சந்தித்தனர்.

சென்னை:

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவினை சரிசெய்து இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை பெறுவதற்கு இரு அணிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். 

இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துள்ளனர். இன்பதுரை, தென்னரசு, சந்திரசேகர், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.கள் தலைமைச் செயலகம் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT