சென்னை:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், குனிகல் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தின் ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
சாலை விபத்தில் பலியான 10 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தின் தன்மையையும் உயிரிழந்தவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.