செய்திகள்

பஞ்சாப்: நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.3 கோடி தங்க நகைகள் கொள்ளை

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் நிதி நிறுவன காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டி 3 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரின் பிரபல மார்கெட் பகுதியான ராமாமண்டி என்ற இடத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தங்க நகைகளின்பேரில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

நேற்று அலுவல் நேரம் முடிந்த பின்னர் இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்போல் வந்த ஒருவர், வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்தார். வெளியேவந்து கதவை திறந்த காவலாளியின் கழுத்தில் அவர் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்.

அப்போது, வெளியே காத்திருந்த மேலும் ஐந்துபேர் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தனர். உள்ளே நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை காவலாளியிடம் இருந்து பறித்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ தங்க நகைகளை அள்ளிக் கொண்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த துணிகர கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஜலந்தர் நகர போலீசார், அந்த நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT