கெய்ரோ:
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பல பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறைக் களமாக நாடு மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சிமாய் தீபகற்பம் பகுதியில் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
எதிர்பாராத வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் தீவிரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையாட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சினாய் பிரதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியின் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு வாகனங்களில் வந்த 40 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இருதரப்பிலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.