கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காட்டில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து கூடுதல் எஸ்.பி.பூங்குழலி மேற்பார்வையில் டவுன் ரெயில் நிலையம் அருகில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் ரூ.1 கோடி பழைய 500, 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நோட்டுகளை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் திருச்சூர் இரிஞ்ஞாலக்குடா சிஜோ (வயது 37), பாவரட்டி பிரசாத் (47), குட்டநெல்லூர் கோபால கிருஷ்ணன் (47), அத்தாணி மணி, கொழிஞ்சாம்பாறை சக்கீர் (30), பாலசுப்பிரமணியம் (25), கோவை மனோஜ்குமார் (37), அப்பாஸ் (37), சந்தோஷ்குமார் (28), யாசர் (30) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் 10 பேரையும் கைது செய்த போலீசார் செல்லாத நோட்டுகள், மற்றும் கார், இரு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான 10 பேரும் செல்லாத நோட்டுகளை மாற்றும் ஏஜெண்டுகள் ஆவார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு ரூ.18 லட்சம் வரை கமிஷனாக பெற்று கொண்டு, செல்லாத பணத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் மாற்றி விடுவதாக கூறப்படுகிறது.
தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வாழ்வதால் இதை பயன்படுத்தி இந்த கும்பல் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தது தெரிய வந்தது.