ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று அதிகாலை அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
பதிலடியாக தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். வேறு தீவிரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.