செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக போயஸ்கார்டனில் 30-ந்தேதி விசாரணை தொடங்கும்: நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறேன். அன்றைய தினம் போயஸ் கார்டனுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரிக்க உள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி கூறினார்.

மாலை மலர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த விசாரணை கமி‌ஷன் நடைபெறுவதற்காக சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் புதிதாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கு நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை 10.30 மணிக்கு வந்து தனது பணியை தொடங்கினார்.

அப்போது நிருபர்கள் அவரை பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

கே:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணம் குறித்த விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்?

ப:- திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறேன். அன்றைய தினம் போயஸ் கார்டனுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரிக்க உள்ளேன்.

ப:- எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளது. விசாரணை வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும்.

கே:- குறித்த காலத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படுமா?

ப:- குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


அதன் பிறகு நீதிபதி அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், அது குறித்து தங்களுக்கு தெரிந்த தகவலை சத்தியபிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் (3 நகல்களுடன்) தகுந்த ஆவணங்களுடன் விசாரணை கமி‌ஷன் அலுவலக ஆணையத்திடம் நவம்பர் 22-ம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றைய தினம் போயஸ்கார்டன் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

75 நாட்கள் சிகிச்சையில் டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

சிகிச்சையில் இருந்த போது அவர் நன்றாக தேறி வந்ததாகவும் இட்லி சாப்பிடுகிறார். டி.வி.பார்க்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்றெல்லாம் செய்தி தொடர்பாளர்கள் பேட்டி கொடுத்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா திடீரென மரணம் அடைந்ததால் அவரது மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

எனவே நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளதால் அவரிடம் விவரம் தெரிந்தவர்கள் சென்று ஆஜராகி விளக்கம் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணையில் பங்கேற்க விரும்புபவர்கள் பெயர் விவரங்களை கொடுத்தால் வரிசைப்படி ஒவ்வொருவரையும் நீதிபதி அழைத்து விசாரிப்பார்.