பெண்கள் மருத்துவம்

இயற்கை அளித்த இன்சுலின் வாழைப்பூ: சர்க்கரை நோய் முதல் மகளிர் ஆரோக்கியம் வரை- ஓர் பார்வை

பெண்களுக்கு ஏற்படும் பல பிரத்யேக சுகாதாரப் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதமாகும்.

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித ஆரோக்கியத்திற்கு பெருமளவில் பயனளிக்கிறது. குறிப்பாக, வாழையின் மலரான வாழைப்பூ, பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் நோய்களைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகவும், அன்றாட உணவில் சுவைமிகுந்த ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. நவீன காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த உணவுப் பயன்பாடு ஆகியவற்றால் அதிகரிக்கும் பல நோய்களுக்கு வாழைப்பூ ஒரு எளிய இயற்கை தீர்வாக அமைகிறது.

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்

வாழைப்பூவில் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் பெருமளவில் உள்ளன. வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் உள்ள பல கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்

வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் கணையத்தின் செயல்பாட்டைச் சீராக்க உதவுகின்றன. கணையம் பலமடையும் போது உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரப்பு சீராகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் இதனைச் சரியான முறையில் சமைத்து உண்பதன் மூலம் மருந்துகளின் தேவையை ஓரளவு குறைக்க முடியும்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களுக்கு ஏற்படும் பல பிரத்யேக சுகாதாரப் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதமாகும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைக்க வாழைப்பூவின் உள்குருத்து சாறுடன் மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

வாழைப்பூவைக் கொண்டு வைக்கப்படும் ரசம், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் கோளாறைச் சீராக்க உதவுகிறது. தொடர்ச்சியாக வாழைப்பூவை உணவில் சேர்ப்பதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கி, கருவுறுதல் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.

உடல் சூடு தணிப்பு

அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட வாழைப்பூ, மலச்சிக்கல் மற்றும் ரத்த மூலம் போன்ற பிரச்சனைகளுக்குப் சிறந்த தீர்வாகும். வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு மற்றும் நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடும் போது உடலின் அதிகப்படியான சூடு தணியும். சீரகம் மற்றும் மிளகு சேர்த்து செய்யப்படும் வாழைப்பூ கஷாயம் அஜீரணம் மற்றும் சீதபேதியைக் குணப்படுத்த வல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்

சர்க்கரை நோயாளிகள் பயன்பெறும் வகையில் குறைவான எண்ணெயில் பொரியல் சமைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ ஒன்று, சின்ன வெங்காயம் பத்து, பூண்டு ஐந்து பற்கள், பச்சை மிளகாய் இரண்டு, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை.

சமைக்கும் முறை

வாழைப்பூவை உரித்து, அதன் நடுவில் உள்ள நரம்பு மற்றும் கள்ளன் பகு நீக்கப்பட வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி, கசப்புத்தன்மை நீங்க மோர் கலந்த தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தட்டிய மிளகு மற்றும் மோர் நீரில் ஊறவைத்து பிழிந்த வாழைப்பூவை சேர்த்து உப்பு தூவி மூடி வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்கிப் பரிமாறலாம்.

முக்கியமான குறிப்பு

வாழைப்பூவை சமைப்பதற்கு முன் முழுமையாக சுத்தம் செய்வது அவசியமாகும். கசப்புத் தன்மையைப் போக்கவும், பூ கருக்காமல் இருக்கவும் மோர் நீரில் ஊறவைப்பது மிகவும் முக்கியம். மதிய உணவோடு இந்த பொரியலை சாப்பிட்டு, பின் பதினைந்து நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இயற்கை தந்த "உணவே மருந்து" தத்துவத்திற்கு வாழைப்பூ ஒரு சிறந்த உதாரணமாகும். இதனைத் திட்டமிட்டு உணவில் சேர்ப்பதன் மூலம் நோயற்ற வாழ்வை எளிதாகப் பெற முடியும்.

SCROLL FOR NEXT