இன்று பெரும்பாலானோருக்கு வீட்டுக் கனவை நனவாக்க உதவுவது, வீட்டுக் கடன்தான்.
வருவாய் ஈட்டும் பெண்களும், கணவருடன் இணைந்தும், தனித்தும் வீட்டுக் கடன் பெறுகின்றனர். அதன் மூலம் தங்கள் கனவு இல்லத்தில் குடியேறுகின்றனர்.
ஆனால், நீண்டுகொண்டே செல்லும் மாதாந்திர தவணைதான் (ஈ.எம்.ஐ.) பலரை நாளடைவில் சோர்வடையச் செய்கிறது.
ஆனால், புத்திசாலித்தனமாக திட்டமிட்டுச் செயல்பட்டால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே வீட்டுக் கடனை கட்டி முடிக்கலாம். அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க முடியும். அதற்காக நீங்கள் முன்கூட்டியே பல லட்சங்களை மொத்தமாக செலுத்த வேண்டியதில்லை. உங்கள் மாதத் தவணையில் செய்யப் போகும் ஒரு சின்ன மாற்றம் போதும்.
இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், வட்டி என்ற பெயரில் வங்கிக்குச் செலுத்தும் பல லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.
அது எப்படி என்று பார்க்கலாம்...
நீங்கள் செலுத்தி வரும் வீட்டுக்கடன் தவணையில் ஆண்டுக்கு ஒரு தவணை அதிகமாக செலுத்தி வந்தாலே போதும். இதுவே உங்கள் கடனுக்கான 20 ஆண்டு கால அவகாசத்தை 15 ஆண்டுகளாக குறைக்கும்.
ஏனெனில் கூடுதலாக செலுத்தும் தொகையானது நேரடியாக உங்கள் கடன் குறைய வழிவகுக்கும். ஆக இந்த ஒரு சிறிய மாற்றம், உங்களுக்கு பல மாதங்களை மிச்சப்படுத்த உதவும். வட்டித் தொகையையும் சேமிக்க வழிவகுக்கும்.
உங்களுடைய சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, மெதுவாக உங்கள் மாத தவணையை அதிகரித்தாலும், அதுவும் பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்த உதவும்.
உதாரணமாக, வருடத்துக்கு 5 சதவீத தொகையை அதிகரித்தால், 20 ஆண்டு கால தவணையானது 12 ஆண்டுகளில் முடிவடையும். ரூ.50 லட்சம் கடனில் 9 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் ரூ.30 லட்சத்தை மிச்சப்படுத்த உதவும்.
இந்த உத்தியானது மிகவும் எளிதான ஒன்றுதான். ஆனால் பலன் மிகப்பெரியது. நீண்டகால அடிப்படையில் கடன் வாங்கும் போது வங்கிகள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன. பலரும் இதை அறியாமலேயே மாத மாதம் வெறும் தவணையை மட்டும் செலுத்தி, வட்டிக்கு வட்டி என செலுத்தி பெரிய அளவிலான தொகையை தங்களுக்கு அறியாமலேயே இழக்கிறார்கள்.
ஆனால், திட்டமிட்டு முன்கூட்டியே அசலை குறைப்பதன் மூலம், வட்டியும் குறையும். கடனுக்கான கால அவகாசமும் குறையும்.
எடுத்துக்காட்டாக, 20 ஆண்டுகால கடனில், முதல் சில ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் தொகையானது பெரும்பகுதி வட்டிக்கே சென்றுவிடும். அசல் தொகை பெரிய அளவில் குறையாமலேயே இருக்கும்.
ஆனால் நீங்கள் திட்டமிட்டு அசலில் பணம் செலுத்தும்போது, வட்டித் தொகை குறையும். ஆக, உங்கள் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் தொகையை செலுத்தி வந்தால், அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தலாம்.