பெண்கள் உலகம்

கோடையில் சருமம் கருக்காமல் இருக்க...

கோடை காலத்தில் சருமம் வறட்சி அடையாமலும், எண்ணெய்ப் பசையாக மாறாமலும் சமநிலையில் இருப்பது அவசியம்.

கோடைகாலம் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் அதிக வெப்பம், புழுதி ஆகியவற்றால் சருமத்தில் கருமை, நீர்ச்சத்துக் குறைபாடு, முகப்பரு, பொலிவின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்நிலையில், கோடையில் சருமம் கருக்காமல் இருக்க சில ஆலோசனைகளை பார்க்கலாம்...

கோடை காலத்தில் சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை நேரடியாகத் தாக்குகின்றன. இதனால், அயர்ச்சியான தோற்றமும் கருமையும் உண்டாகின்றன. இதைத் தடுக்க 'நான்-நானோ ஜிங்க் ஆக்சைடு' கலந்த மினரல் சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.

இந்த வகை சன் ஸ்கிரீன், சருமத்துக்குள் ஊடுருவாமல், ஒரு படலமாக மேலேயே இருந்து சூரியக் கதிர்களைப் பிரதிபலித்து வெளியே தள்ளும். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக இந்த வகை சன் ஸ்கிரீனை சருமத்தில் தடவ வேண்டும்.

நீர்ச்சத்தை அதிகரித்தல்

கோடைகால வெப்பம் காரணமாக அதிக வியர்வை வெளியேறி விரைவாகவே உடல் நீர்ச்சத்தை இழந்து விடும். இதனால் சருமம் பொலிவற்று காட்சி தரும். இதைத் தடுக்க நாளொன்றுக்கு குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். அதிகம் காபி, டீ அருந்துவதை தவிர்ப்பதோடு, தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

முறையான சுத்திகரிப்பு

கோடைகாலத்தில் காற்றில் உள்ள மாசு மற்றும் வியர்வையின் காரணமாக சருமத் துளைகள் அடைபட்டு முகப்பருக்கள் உண்டாகின்றன. இதைத் தடுக்கவும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் மென்மையான பேஸ் வாஷ்களை பயன்படுத்தி தினமும் 2-3 முறை முகத்தைக் கழுவ வேண்டும்.

மாய்ஸ்சரைசரை மறக்காதீர்கள்

கோடை காலத்தில் சருமம் வறட்சி அடையாமலும், எண்ணெய்ப் பசையாக மாறாமலும் சமநிலையில் இருப்பது அவசியம். ஆகவே இக்காலத்தில், சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள பிசுபிசுப்பு இல்லாத, அடர்த்தியற்ற மாய்ஸ்சரைசர்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லது.

இயற்கையான குளிர்ச்சி தரும் பொருட்கள்

கோடை வெயிலால் தோலில் எரிச்சல் மற்றும் சிவந்த தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. இதைக் குறைக்க இயற்கையான குளிர்ச்சி தரும் பொருட்களான கற்றாழை, வெள்ளரிச்சாறு மற்றும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்துவது சருமத்துக்கு உடனடி ஆறுதலைத் தந்து, தோல் எரிச்சலைக் குறைத்து புத்துணர்ச்சியை வழங்கும்.

நேரடி வெயிலைத் தவிர்த்தல்

கோடைகாலத்தில் சருமம் கருப்பாகாமல் இருக்க கிரீம்கள் மட்டும் உதவாது. நேரடி வெயிலைத் தவிர்க்க அகலமான விளிம்புள்ள தொப்பிகள், தரமான கூலிங் கிளாஸ், ஸ்கார்ப் அல்லது குடையைப் பயன்படுத்து வதும் சருமத்துக்கு பாதுகாப்பாக அமையும். மேலும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் பாதுகாப்பாகும்.

சத்தான கோடைகால உணவு

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள பருப்பு மற்றும் கொட்டைப்பருப்புகளை சாப்பிடுவது நல்லது.