வீட்டின் மையமாய், அனைத்து வேலைகளிலும் சுற்றிச் சுழல்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு அன்றாட வீட்டு வேலைகளில் சலிப்பு ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்...
* தினசரி காலை நேரத்தை உங்களுக்குப் பிடித்த பாடலுடன் தொடங்குங்கள். மனம் தானாகவே இலகுவாவதையும் புத்துணர்ச்சி பெறுவதையும் உணர்வீர்கள்.
* வேலை செய்யும்போது உங்களுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை சொற்பொழிவு அல்லது பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்பது, உற்சாகம் தரும்.
* இந்த வேலையை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலைக்கும் நேர நிர்ணயம் செய்வது, கடினமான வேலைகளையும் விரைவாக முடிக்க வைத்து விடும்.
* வேலைகளுக்கு இடையே ஓர் ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்து, நமது மூச்சை மட்டும் கவனிக்கலாம். இது மனதை அமைதிப்படுத்தி, தேவையற்ற எண்ணங்களைக் குறைக்கும். இதனால் மனஅழுத்தம் குறையும், கவனம் அதிகரிக்கும்.
* தினந்தோறும் வேலைகளை ஒரு வெள்ளைத்தாளில் பட்டியல் போட்டு எழுதிவைத்துக் கொண்டு, ஒவ்வொரு வேலையும் முடிந்தவுடன் 'டிக்' செய்வது, மிகுந்த மன நிறைவைத் தந்து, அடுத்த வேலையை ஆரம்பிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.
* ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்வது சலிப்பையே தரும். எனவே சமையல் செய்வது, சுத்தம் செய்வது, துணிகளை மடிப்பது என்று மாறி மாறிச் செய்யுங்கள்.
* வீட்டில் கமழும் நறுமணம் மனதுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். எனவே ஊதுபத்தி மணம், சாம்பிராணி மணம் அல்லது ரூம் பிரெஷ்னரை வீட்டில் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
* வேலைக்கேற்ற சுத்தமான, வசதியான உடை அணிவது, இடையூறு இல்லாமல் இருக்கும். ஆடை கசகசப்பின்றி இருந்தால், மனதிலும் மென்மை நிலவும்.
* காலையில் எழுந்து என்ன சமைப்பது என்பதை யோசிப்பதற்குப் பதிலாக, இரவிலேயே என்ன சமைக்கலாம் என்று யோசித்து அதற்குரிய பொருட்களை எடுத்து வைப்பதன் மூலம் காலையில் ஏற்படக்கூடிய பரபரப்பைக் குறைக்க முடியும்.
* வேலை செய்யும்போது நல்ல விஷயங்களை மட்டுமே நினையுங்கள். தேவையில்லாத கவலைகளுக்கு இடம் தர வேண்டாம்.
* வேலை முடிந்த இடத்தை உடனே ரசித்துப் பாருங்கள். 'நான் செய்தது' என்ற பெருமை வரும்.
* வீட்டை அலங்கரிப்பதை உங்கள் பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.
* பெரிய வேலையாக இருந்தால் ஒருநாள் ஒரு பகுதி என்ற முடிவை எடுங்கள். மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அந்த வேலை முடிந்துவிடும்.
* குழந்தைகள் உள்பட வீட்டில் உள்ளவர்களையும் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்துங்கள். சுமை குறையும். மகிழ்ச்சி பெருகும். அவர்களுக்கும் பொறுப்பும் வரும்.
* வீட்டில் செடி வளர்ப்பது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.
* இது என் வீடு, இது என் குடும்பம் என்ற ஆழமான எண்ணம், கடினமான வேலைகளையும் மலைக்காமல் செய்ய வைக்கும்.
* வேலை முடிந்ததும் உங்களுக்கு சின்ன அலங்காரம் செய்து கண்ணாடியில் பார்த்து ரசியுங்கள். அது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
பொதுவாக, வீட்டு வேலையை கடமையாகக் கருதாமல் அன்பின் வெளிப்பாடாகக் கருதி செய்வது, சலிப்பையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும்.