பெண்கள் உலகம்

சமையல் எரிவாயுவை எவ்வாறு சேமிக்கலாம்

எதற்கெல்லாம் பிரஷர் குக்கரை பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துங்கள்.

எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு, கியாஸ் சிலிண்டர்

தற்போதைய போர்ச் சூழல், எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. அதிலும் சமையல் எரிவாயு நிலவரம், இல்லத்தரசிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், சமையல் எரிவாயுவை எவ்வாறு சேமிக்கலாம் என்று பார்க்கலாம்...

* குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) இருந்து எடுத்து பால், தோசை மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால், குறைந்தது 2 மணிநேரத்துக்கு முன்பே பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து விட்டால் எரிவாயு மிச்சமாகும்.

* அரிசி, பருப்பு போன்றவற்றை சமைப்பதற்கு அரைமணி முன்னரே ஊற வைத்துவிட்டால், வேகும் நேரம் குறையும், எரிவாயுவைச் சேமிக்க முடியும்.

* எதற்கெல்லாம் பிரஷர் குக்கரை பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கர் சமையலில் எரிவாயு அதிகம் செலவாகாது.

* பொரிக்க வேண்டிய உணவுகளை மசாலாவில் சற்றுநேரம் ஊறவைத்துப் பொரித்தால் எரிவாயு குறைவாக செலவழியும்.

* அளவாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவைத்தால் பொரியல் காய்கறிகளை சீக்கிரம் சமைக்கலாம்.

* பாத்திரங்கள், வாணலியை ஈரத்தோடு அடுப்பில் வைக்காமல் நன்றாக துடைத்துவிட்டு அடுப்பில் வைத்தாலும் எரிவாயுவை சிறிதளவு சேமிக்க முடியும்.

* சரியான தீ அளவை பயன்படுத்த வேண்டும். சமையலின் இரண்டாம் பகுதியில், தீ அளவை குறைத்து வைத்துக்கொண்டால் போதும். பாத்திரத்தின் அடிப்பகுதியைத் தாண்டி தீப்பிழம்பு வெளியே வந்தால் எரிபொருள் வீணாகும்.

* அடுப்பு எரிப்பான் (பர்னர்) துளைகளை அவ்வப் போது பார்த்து சுத்தப்படுத்த வேண்டும். தீ ஜூவாலை நீல நிறத்தில் இருந்தால்தான், எரிவாயு முழுமையாக பயன்படுகிறது என்று அர்த்தம்.

* சமைப்பதற்கு முன் தேவையான பொருட்களை அருகே வைத்துக்கொள்ளவும். எரிவாயுவை பற்ற

வைத்துவிட்டு வெங்காயத்தை அரியத் துவங்க வேண்டாம்.

* சமைக்கும் அளவுக்கேற்ற பாத்திரங்களை பயன்படுத்தலாம். குறைந்த அளவு சமையலுக்கு பெரிய வாணலிகளை உபயோகிக்க வேண்டாமே!

* நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றுக்கு, கொதிக்கும் நீரில் போட்டவுடனேயே மூடிவைத்துவிட்டால் நீரின் வெப்பத்துக்கே வெந்துவிடும்.

* அப்பளம் பொரிக்கும்போது கடைசி அப்பளங்களை எரிவாயுவை நிறுத்திவிட்டு எண்ணெய் சூட்டிலேயே பொரிக்கலாம்.

* பால் காய்ச்ச கெட்டில், சமையலை சூடுபடுத்த இன்டக்ஷன் அடுப்பு என மாற்று ஏற்பாடுகளையும் பயன்படுத்தி எரிவாயுவை சிக்கனப்படுத்தலாம்.

* காலையில் படுக்கையில் இருந்து தாமதமாக எழுந்து வருபவர்களுக்கென தனித்தனியாக காபி தயாரிக்காமல் அவர்களுக்கான காபியை பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தாலும் எரிவாயு மிச்சமாகும்.

சமையல் எரிவாயு பயன்பாட்டில் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை மறக்க வேண்டாம்.